Wednesday, August 15, 2012

எரிபொருளின் எட்டா விலை

வேலையிடம் சேர்ப்பிக்கும் பேருந்தும்
காய்கனி சுமக்கும் லாரிகளும்
வயிறு நிறைக்கும் சமையலடுப்பும்
எரிசக்தியின்றி எம்
கண்ணீர் சக்தியிலா இயங்குகின்றன
சொல்லடி சிவ சக்தி!

இன்றைய மாணவன்

தெருவிளக்கொளியில் அறிவு
தாகம் தணித்து
பெருங்கிணறு தாண்டி
பெரியதொரு படிப்பு
பின்னர்
சிறு தோல்வி தாளாமல்
புல் தடுக்கி வீழ்ந்து
தன்னுயிர் தானே மாய்த்தது
பரிதாபமல்ல
பயங்கர கோழைத்தனம்
அதுவரை இறைத்த அறிவு
விழலுக்குதானோ?
  

Monday, August 13, 2012

நிலைப்பாடு



அரசியல் தர்மம்,
பொதுவுடைமை,
அவையடக்கம்
எனும் உடைகள் களைந்து
நிர்வாணம் பழகிய
விலை மகளென
வெட்கம் துறந்தது
இன்றைய அரசியல்வாதியின்
நிலைப்பாடு !

இடைவெளி


மெலிதாய்
துகிலென படர்கின்றது
புலப்படாத கண்ணாடி
உனக்கும் எனக்குமான
இடைவெளியில்!
இந்நாட்களில்
பலமுறை முட்டிமோதி
நெற்றி தேய்த்தோம்
குறைகின்ற
தொடு தூரத்தில்!

இரு வரிக் குரல்


மூத்தவள்
முடிந்தவரை கூச்சலிட்டு
இயன்றவரை
நெட்டித்தள்ளி
போட்டியிடுவாள்
இளையவனுடன் - அவனோ
உணவுப் பரிமாறுகையில்
இரு தட்டுக்கள் நீட்டுவான்
அவளுக்கும் சேர்த்து!
அவனது இரு வரிக் குரல்
அம்மா, அக்கா!

இதுவும் கவிதை


கை தூக்கி
உதடு குவித்து
புருவம் நெரித்து
புன்னகைத்தே
பொய் கோபம்
கொள்வாள் மகள்,
எனது எதிர்மறை
வினாக்கள்
சீண்டும்பொழுது!

Sunday, June 19, 2011

உயிரிலே கலந்தது

இதற்குதான்
அதற்குதான் எனக்
காரணங்கள் கற்பித்து
கற்றை கற்றையாய்
சேர்த்தேன்
கோடியும் நூறு கோடியும்
தாண்டியபின்
எதற்குதான் என
புரியாமல்
உயிரிலே கலந்தது!
எப்படியும்
சில கோடிகளில்
சரி செய்துவிடலாமென
நினைக்கையில்
நெற்றிப் பொட்டில் அறைந்தது
நியாயம்
சிபிஐ வடிவில்!!!

தேர்தலும் முடிவும்

சில சமயங்கள்தான்
நாயகர்கள் இந்த
நாட்டின் மக்கள்

சிறிதாய் சந்தோச
இறுமாப்பு
விரலில் மை ஏறியபின்

சனங்களின் நியாயமாய்
சனநாயகம்
சிரிக்கின்றது ஒருமுறை

முடிவுகள்
மூடிய மனங்களின்
நியாய முகம்

தோற்கவில்லை
மக்களாட்சியின்
மதிப்பும் பொருளும்

முரண்

ஆங்காங்கே
அமைதிப் பூக்கள் மலர
நடுவது நடந்துக்கொணடேயிருக்க
எங்கெங்கும்
பரவலாய் பதற்றமுடன் உயிர்
பறிப்பதும் தொடர்ந்துக் கொணடுதானிருக்கு!

இயல்பு

ஒரு சில சிம்மங்களும்
சில நூறு நரிகளும்
பல்லாயிரம் மந்தையாடுகளுமென
மிருக இயல்பு
மனிதனுக்கு!

பசிக்கு மட்டும் புசிப்பது
பகிர்ந்து பதுங்குவது
தனது குடும்பம் பிரதானமானது
மனித இயல்பு
மிருகத்திற்கு!



வானவில் தேசம்

இங்கு
கனவுகளும்
கவிதைகளும்
நியாயங்களும்
நடைமுறையும்
உரிமைகளும்
உயர்வுகளும்
படிப்பறிவும்
பாதுகாப்பும்
உயிர் வாழ்தலும்
உயிர் விடுதலுங்கூட
வெவ்வேறு நிறங்களில்
சமன் படாத சமூகமாய்
வானவில் தேசமிது!

கடந்த ஞானம்

எனது முதுகுக்குப்பின்
இதுவரை சேகரித்த
பெரும் சொத்துக்கள்
விழல் நீரெனவும்
வீணடித்த சிற்றின்பங்கள்
உயிரிழப்பாகவும்
உருமாறின!
பாதை திருத்திய பயணம்
மறுமுறை துவங்க
எஞ்சிய மணித்துளிகள் போதாது!

Thursday, June 16, 2011

தேடல்

நினைத்தது நடவாது
தேடுதல் விடைகாணாது
அயற்சிதான் எம் வாழ்க்கை
வெளிப் பார்வைகள்
நான் கிடைத்ததை
சுகிக்காமல் தொடர்ந்து
தேடுவதை இரசிக்கின்றன

பசுவின் பார்வை

ஈக்கள் விரட்டதான்
வாலாடும்
என்பது அறிவியல்
உள்ளுணர்வுகள் பொறுத்தும்
வாலாடும்
என்பது மெய்பொருள்

Saturday, September 11, 2010

பயம்

இளம் பிராயத்தில்
இருட்டில் நடக்கையில்
தோன்றி மறையும் உருவங்களுக்கு
பயங் கொள்வது போல்
இன்றும்
இருதயத்தின் பலவீனப் புள்ளியில்
எழுந்து வடிகின்றன
பய அலைகள்
தொடர்ச்சியாய்!

Monday, August 16, 2010

வெந்நீர் மீன்கள்

தண்ணீரில் பிறந்து
தனக்கானதாய் உலகம் பழகிய
மீனினம் நான்

விரியட்டுமென் எல்லையென
புலம் பெயர்ந்தேன்
வெந்நீர் நிரம்பிய வேற்றுலகிற்கு

சில மீன்கள்
வெந்து விழுப்புண் பெற்று
வெந்நீர் மீன்களாயின

வேறு சில
வெம்மை பொறுக்காமல்
விவேகமாய் திரும்பின

பெரும்பாலானவை
வெம்மையும் பழகாமல் தண்ணீரும்
திரும்பாமல் தள்ளாடின

அனுதினம் புதிதாய்
கொதிநீர் ஊற்றபடுவதாய்
உணர்வு எனக்கு

தண்ணீர் தேசம் திரும்பி
ஆற வைக்கலாமென
நாட்கள் நீந்தப் பயில்கின்றேன்

Sunday, August 15, 2010

நூற்றாண்டு கனவு

அறுபத்தி மூன்றாகின்றது
அகவை - எம்
தாய் திருநாட்டின்
சுதந்திர தேவிக்கு!
முதல் பத்தில்
முதிர்ச்சியடைந்து
முயற்சிகள் பல கண்டது!
இடையில் இலக்கில்லாமல்
இன்னல்கள் நேர்கொண்டது!
இழுத்து செல்லும்
இதிகாசத் தலைவர்களின்
பரிகாச பாதக செயல்களுக்கு
அரசியலென பெயரிட்ட
நயவஞ்சகமும் கண்டது!
எழுத்தறிவு கொண்டவரின்
எண்ணிக்கை உயர்வினாலும்
திறைகடல் தாண்டிய
திறன்மிகு இளையவர்களினாலும்
புதியதொரு விடியலும் கண்டது!
பல்லாண்டுகளாய் தொடரும்
'வளர்கின்ற' நாடெனும் பட்டம்
நூற்றாண்டிற்குள்ளாவது
மாறிட மெய்படுமோ!

முடிவுகள்

இதுவரை
முக்கியமான முடிவுகள்
இதுவா அதுவாவென
இரு தண்டவாளங்களின் மேலெ
தடுமாறி பயணிக்கின்றன
தூரத்தே இரு மனநிலைகளும்
இணைவதுவாய் தோற்றம்
கடந்து சென்றபோதும்
முற்று பெறாத முடிவுகள்!

Sunday, August 08, 2010

அருகாமை

இசைதட்டு மாற்று,
சன்னலை இறக்கு,
குளிர்பதனியை சரிசெய்,
ஏனைய அதட்டல்கள் கேளாமல்
அமைதியுடன் பயணிக்கின்றது
எனது வாகனம்.
குட்டி தேவதையின்
அருகாமை மதிப்பு
ஒளியில்லாத இருளுக்கு,
வெப்பமில்லாத தட்பத்திற்கு
புரிவது போன்றது.

தீவு

வானூர்தியின் வரைபடத்தில்
உன் வசிப்பிடம்
விலகி விலகி விரைகையில்
துவங்கியது
காற்றிலாத அறையில்
மூச்சடைக்கும் உணர்வு!
மனிதர்களின் மத்தியிலும்
நீயிலாத தனிமை தருணம்
நாற்புறமும் நீர் சூழ்ந்த
தீவாய்தான் தோன்றியது!
விலைவாசியின் ஏறுமுகமாய்
இந்த இடைவெளி
காதலை பெருக்கினாலும்
இனிமேலும் வேண்டாமென
வேண்டுவது இயற்கை!