Sunday, June 19, 2022

சன்னல் மரம்

சன்னல் வழி தெரியும் மரங்கள்

சிறப்பானவைதாம் 

எங்கிருந்தாலும்


சூரிய கடிகாரம் போல்

வாழ்வுக் கடிகாரம் இந்த

சன்னல் மரங்கள்


எப்பொழுது பார்த்தாலும்

அன்றைய மனநிலையை 

துல்லியமாய் காட்டிடும்


அந்தந்த சூழலுக்கேற்ப 

வடிவமைத்துக்கொண்டே

வளர்ந்து வரும்


காணும் கண்களுக்கோ

கவிதையாக உள்புகும்

மரத்தின் நிழற்படம்


என் பிறப்பிடத்தின் சன்னல் மரமும்

என் இருப்பிடத்தின் மரமும்

என் வழியே இணைந்திருக்கும்!

—கி.வினோத்


Thursday, December 30, 2021

புகைப்படம் பேசுகிறது

புகைபடம் ஒரு கால இயந்திரம்

பதிவிட்ட நேரத்திற்கு

பின்னோக்கி கடத்தி

நினைவுகளை நெகிழ செய்யும்


புதிதாக பிடித்த படமோ

தற்பொழுதை உறைய வைத்து

பின்னொரு தினத்து

புத்துணர்விற்கு பதியனிடும்


இருப்பவர் இல்லாதவர்

முறுவலுடனோ முறைப்புடனோ

புகைப்படங்கள் என்றும்

மகிழ்வான தருணங்களைதான்

பிரதிபலிக்கும்


பல்வேறு மணிக்கூறுகளை

சிறைபிடித்த சந்தோசத்தில்

சுவற்றில் சிரிக்கின்றன

என் வீட்டு புகைப்படங்கள்!

-- கி.வினோத்


Thursday, June 03, 2021

16வது திருமண நாள்

மெழுகாய் அன்புநெகிழ்ந்து உருகி

வெள்ளிபோல் காதல்கசிந்து இருகி

பதினாறு தொட்டது

எம் திருமணத்தின் அகவை!

ஒரே நாளில் விருட்சமாகிடவில்லை

ஒவ்வொரு வருடமாய் வளர்ந்தது

முட்களும் பூக்களுமாய் மலர்ந்தது!

துயிலா இரவுகளுக்கு விடியலாய் நீயும்

வலியான பகல்களின் அஸ்தமனமாய் நானும்

சமன்செய்யும் வண்டிமாடுகளாய் ஈடுகொடுத்தே

முன் நகரும் தாம்பத்தியம்!

சிறு கவிதையாய் மகளும்

சிறு கதையாய் மகனும்

சங்கமத்தின் இலக்கிய வெளிப்பாடு!

இணைப்பிரியா அன்னப்பறவைகளாய்

தொடுவானம்வரை நீந்திச் செல்வோம்!

-- கி.வினோத்   


Wednesday, May 19, 2021

ஈருலக சஞ்சாரம்

திறைகடல்  தாண்டி  திரவியம்  தேடுபவர்  கோடி
தூரமொரு  பொருட்டின்றி  வாழ்ந்தனர் கவிப்பாடி
திசைக்கொரு தேசமென தாயகம் விடுத்தனர்
தனம்பெருக்கவென பெரும்பான்மையினர்
தம்மக்கட் படிப்பிற்கென பலப்பேர்
தேசாதி தேசங்கள் வலம்வர சிலர்
தன்னார்வமுடனோ தள்ளப்பட்டோ தவித்தனர்
தற்கால சடுதியில் கலந்துவிட்ட புதுவுலகம்
தனதானவர்களின் நினைவிலேயே கரைந்து மறு உலகம்
தணல்போல் உவகையில் மிதக்கையில் தெரிவதில்லை
திடுக்கிடும் துக்கசேதியில் துவண்டிடும் இயலாமை
தடுமாறும் அயல்நாட்டாரின் நெஞ்சோரம்
ஈருலக சஞ்சாரம்!

-- கி.வினோத்

Friday, May 01, 2020

மேதகு தினங்கள்!

தற்போதைய நிலையில்
தன்னலமில்லா உழைப்பும்
தியாகமிகும் கடமையும்
செலுத்தும் வீரர்களான
காவலரும், மருத்துவரும்,
செவிலியரும், அரசுப்பணியாளரும்,
தெருவியாபாரியும், கடைக்காரரும்,
இன்னபிற மனிதத் தெய்வங்களும்
உண்மையான உழைப்பாளிகள்!
மனிதத்தின் காப்பான்கள்!
மே தினம் மட்டுமல்லாமல்
இவர்களின் சேவைக் காலமெல்லாம்
மேதகு தினங்கள்!

---கி.வினோத்

Monday, December 16, 2019

ஒரு புறம் பாயும் காதல் நதி

உனது புதுப்புது முகங்களில் உள்ளம் கரைத்து காதல் வளர்த்தவன்
ஏனோ நேற்றைய முகத்தின் ரேகைக்கண்டு
இதயத்தில் விரிசல் கொண்டனன்

சுயமதிப்பீடு செய்து விம்முகின்றாய்
உனது உயர்மதிப்பிற்கு சான்றிதழ் தேடித் தோற்கின்றாய்
சிற்சில உறவுகளின் பிரதிபலிப்பு பொய்ப்பின்
மறுதலித்து முகம் வாடுகின்றாய்

அன்பளிப்புடன் சிறிதாய் எதிர்பார்ப்பும் சேர்ப்பது போல்
காணிக்கையுடன் பக்தியில் சுயநல வேண்டுதல் போல்
காதலிலும் கைமாறு கேட்கிறாய் தப்பில்லை!

ஒரே திசையில் பாயும் நதி பயணமாய் 
ஒரே வழியில் பிராவாகமெடுக்கும் அன்பு 
கரைதட்டி கவலைக்கொண்டு வெதும்பினால்
என்று சேர்வது கடலை?

தனக்கென வேட்கை இல்லாவிடினும் 
எனக்கெனவொரு வழித்துணையாகவாது வா
இம்மியளவும் எதிர்பார்ப்பற்ற 
நாய்குட்டியின் விசுவாசத்துடன்
நீயும் நானும் ஓடலாம்!!

— கி. வினோத்
16/12/2019

Tuesday, February 19, 2019

சிறுத்தைகளின் சரித்திரம்

 காதலர் தினமன்று கருப்புதினமாக்கிய கோழை வதம். Feb 14, 2019 அன்று நடந்த வன்முறை தாக்குதலில் இன்னுயிர் நீத்த 44 இந்திய வீரர்களுக்கு வீர வணக்கமும் அஞ்சலியும் இந்தக்  கவிதை - கி.வினோத்
#புல்வாமா #pulwama 

படையலுக்கு நேர்ந்துவிடும் பலியாடுகள் இல்லை நீவிர் 
படைகளுக்கு வலு சேர்க்கும் சிறுத்தைகள் அல்லவா நீவிர்!

வீரமுடன் எல்லை காப்பதும் போர்புரிவதும்  தினசரி அலுவல்
விவேகமுடன் கலகம் உட்பூசல் கையாள்வது பகுதி நேரம்
வேட்கையுடன் தீவிரவாதம் தகர்ப்பது  பட்டியலிட்ட பணி 
பாசமுடன் பேரிடர் வதைக்கும் மக்கள் மீட்பது உமது மாண்பு
நேசமுடன் மனை மக்கள்விட்டு தனித்து வாடுவதும் பண்பு
பெருமையுடன் பணியிலும் பனியிலும் உயிர் தியாகம் சிறப்பு


வரம்புகள் பிரித்து விதிமுறையுடன் தாக்குபவன் தேவலை
நரம்புகளின்றி கொடும்நியதி வகுக்கும் கோழைகளின் வேலை
பயமேதுமின்றி பகட்டாய் ஆளும் அரசோ அதன் எந்திரமோ
பாதுகாப்பு குறைவை வெட்கமின்றி கடமையாக்கும் காவலோ
பச்சை துரோகமென உணர்ந்திடாத ஆயுத ஊழல் பேரங்களோ
பக்கத்துணையென நடித்து முதுகினில் குத்தும் பலரை தாங்குவீர்

தம் மண்ணின் மைந்தரை கண்மணிகளாய் காத்திடும்
தங்களுக்கு எம் தந்தையரென பாசம்பாராட்டுவதன்றி என் செய்வது!


Sunday, December 09, 2018

குடைச்சல்

எனது மேல் மாடியில்
எலியொன்றின் இடைவிடாத
அலைச்சல்
எனது காதுக்குள் புகுந்து
மண்டை முழுவதும் பரவி
மறு காதுவழி வெளியேறுவதாய்
குடைச்சல்
திமிறும் எலியினை சிறையெடுத்து
தூக்கி வீசி
அமைதி வாழ்வு வாழ ஆசைதான்
அன்றி
அதன் இருக்கை மறந்து
இயல்பாய் நடித்து
சிந்தை செலுத்துகின்றேன்
எங்கோவொரு மூலையில்
எலி வசித்துக் கொண்டுதானிருக்கின்றது

--கி.வினோத்

கலியுக பிரம்மாவே!


நான் நாயெனவும்
தெருதான் எனக்கான வாழ்வியல்
எனவும்
தீர்மானிக்கும் நீ
மனிதனாய் பிறவி எடுத்தும்
மிருக மனதுடனே அலைகின்றாய்

மற்றவனை கீழ்தரமாய் சிருஷ்டிக்கும்
கலியக பிரம்மாவே
உன்னுடனே போகட்டும்!
உன் உதிரத்தில் உதிர்ந்த
இளைய தலைமுறை
சமவெளியில் பயணிக்க
எம்முடன் கைகள் கோர்க்கட்டும்!

--கி.வினோத்

விரைவு ஊர்தி

நூறாயிரம் முறையேனும் நினைத்திருப்பேன்
இது நாள் வரையிலான பயணம்
விரைவு ஊர்தியாய் பறந்தது போலிருக்கும்

எந்தையர் தலைமுறையின் பயணம்
படிப்படியாய் மேலேறிய அனுபவம்
வழி நெடுகிலும் இளைப்பாற நேரமுடன்
உச்சி சேருகையில் ஆத்மார்தமான திருப்தி

எந்தன் தலைமுறையின் பயணமோ
மின் தூக்கியில் மேலேறும் அனுபவம்
வழி தோறும் இரசிக்க நேரமில்லை
உச்சி சேருகையில் ஆயாசமான அயற்ச்சி

மேலிறிருந்து கீழ் நோக்கு கையில்
இலக்கு அல்ல அதை அடைய
பயணிக்கும் பாதைதான் பாடமென புரிகின்றது!


--கி.வினோத்