Wednesday, December 28, 2005

தனிமை

இதுநாள்வரை
எனது தனிமை
உருவமற்று,
உணர்வு பொங்க அலைந்தது
என்னுடன்!
திடுமென
உன் உருவம் பெற்று
என் பழையன கிழித்து
வலம் வருகிறது
என்னுடன்!
இனியும்
எவ்வாறு அழைப்பேன்
அதை தனிமையென்று!!
-- கி.வினோத்
25/12/2005

தெய்வீகம் நோக்கி

உயிர் கொடுக்கிறாய்
சிருஷ்டி உனது இயல்பு இனி!
விளைநிலமாய் மாறி
விருட்சம் வளர்க்கிறாய்
ஏனைய வலிகள்
எதிர்கொள்ளும் மண்ணுலகமாகிறாய்!
இருவருக்குமாய் புசித்து,
இருவருக்குமாய் வசித்து
அருள் மழை பொழிந்து
பால் மழை சுரந்து
தெய்வீகம் நோக்கி
விரைகின்றாய்!
உன் உதிரம் உதிர்த்து
உயிர் வலியின்
கடைநிலை சென்று
மழலையினை ஈன்றாய்!
உனக்கு
உலகின் உயர்ந்த பரிசு -
நீ ஒரு "தாய்"!!!
-கி.வினோத்
25/12/2005

Thursday, December 15, 2005

காத்திருத்தல்

வானம் பார்த்த இரவுகளில்
எண்ணி எண்ணி
தீர்ந்து போயின
நட்சத்திர சிதறல்கள்!
விரைவினில் வந்துவிடு
இன்னுமொரு வானமில்லை!!!
-- கி.வினோத்
26/06/2003

அழைப்பிதழ்

முரசா இது?
நம் மணநாளை...
ஊரறிய பரைசாற்ற!
மயிலிறகு ஓலையிது
தெரிந்தவருக்கெல்லாம் கொடுத்து வா!

இரு இதயம்
இணையும்பொழுது
எவருமறியாவிடில்
மூடிய புத்தகமாகிவிடும்.

நம் வழியெங்கும்
வாழ்த்துக்கள் நிறைதல்
பிரவாகமாய் வழிந்திடும்
நீர் வீழ்ச்சிக்கு ஒப்பாகும்...
நனையட்டும் நெஞ்சங்கள்!!!
-- என்றென்றும் அன்புடன்
கி.வினோத்

ஈர்ப்பு

இருபதாண்டுகள் மேலாக
சிறிது சிறிதாய்
சேர்த்து வைத்திருந்தேன்...
பல கோடி பூக்களை!
இருபதே நாட்களில்
பூங்கொத்தாய் பறித்துவிட்டாய்!
எளிதில் நாம்
அருகாமை வந்தது பற்றி
இயற்பியலில் -
புவியீர்ப்பு,
காந்த ஈர்ப்பு விசை
என்றெல்லாம் சொல்கிறார்கள்!
இருப்பினும்...
இன்னும் பல புதிர்கள்
இருக்கக்கூடும்,
இனி வரும்
நம் நாட்களை
அலங்கரிக்க......
-- ஆர்வமுடன்
கி.வினோத்

சிநேகம்

என்னுள்
ஒரு சிநேகிதன் வளர்த்து
உலகிற்கு வெளியிட்டிருக்கிறாயம்மா
நீ என்னருகினில்
இலாதொரு தருணம்தான்
புரிந்தது
உன்னுள்ளும்
ஒரு சிநேகிதி வளர்த்து
என்னுடன் அளவளாவி வந்தது!
-- சிநேகமுடன் வினோத்

காவிரி

வரி வரியாய்,
எலும்பு துருத்திய
ஏழையின் மார்பாய்,
காய்ந்த மணல்வெளியுடன்
காவிரியும் அதன்கரையும்!
பெருமாள் ஆற்றில் இறங்க,
ஆடிக்கொருமுறை
மக்கள் பெருக்கை
மகிழ்விக்க,
தலைக்காவிரியில்
தறிகெட்டு மழைபெய்தால்
வெள்ளத்தினை சமன்செய்ய,
அவ்வபொழுது
வந்து போகிறது
ஆற்று நீர்
உறவுக்கார விருந்தாளிப்போல்!
-- கி.வினோத்
22/01/2005

மின்சாரம்

சிலநூறு வருடங்கள் முன்
உனை பார்த்து,
உன் ஒரு ஸ்பரிசம் சுகித்திருந்தால்,
எடிசனுக்கு முன்
எனது பெயர் பதிந்திருக்கும்!
மெல்லிய வருடலில்
உணர முடிந்தது
உனது நரம்புகளின்வழி
மின்சாரம் பாய்வது!
-- கி.வினோத்

தடம்

கடற்கரையில்
ஏகத்திற்கும்
கால்தடம் பதிந்திருக்க
ஒவ்வொன்றிலும்
என் கால் வைத்து
பொருந்திப் பார்க்கிறேன்
முந்தைய
மாலைப் பொழுதுகளில்
நாமிருவரும்
இணைந்து நடந்ததில்
விட்டுச்சென்ற தடங்களை
அதற்குள்ளாகவா
அலைகள் அழித்திருக்கும்?
-- கி.வினோத்

நம்ம சாதிதேன்!

சாதி பார்த்து தேதி பார்த்து - நம்ம
சம்முவம் பயலுக்குத்தான்
சீராக் கட்டிவைச்சோம்.
மூணாநாளே காசுகேட்டு வந்து நிக்கா
மூக்கு சிந்திகிட்டு எங்க அக்கா!

மேலூரும் கீழூரும்
கொம்பு சீவின காளையாத்தான்
கொஞ்சம் வருசமாவே முட்டிகிடுதான்
சாதிமாறி சோடியொன்னு
ஊரவிட்டு பறந்ததுக்கு!

வடக்கால - வீதியெல்லாம்...
சாக்காடா ஆக்கிபுட்டு
வீட்டுக்குள்ள நடுங்கறான்
வக்கிர புத்தி வளர்த்துகிட்டு...
மத்தவன் மதத்தை மிதிச்சிகிட்டு!

சாதியோட சூட்சுமம்
சுத்தமா புரிபடலை
பகுத்தறிவா பார்த்தாலும்,
பத்தாப்புக்கூட படிக்காத
பாவி மக்கா எனக்கு!

பஞ்சாயத்து டிவியில
பலமுறை பார்த்திருக்கேன்
கலர் கலரா சினிமாவுல
கைதட்டி ரசிச்சிருக்கேன்
சாதியொழிப்பு சொன்ன கதைங்கள!

கவிதைக் கட்டுரைங்க பலதுலயும்
பொதிப் பொதியா பொஸ்தகத்துலயும்
படிச்சவுக சொல்றாக -
பசேலுன்னு பதிஞ்சிடனும்
பிரிவினையேக் கூடாதுன்னு!

எள்ளளவும் நெனச்சதில்லே
எஞ்சோட்டுப்பய வேறு சாதின்னு!
எப்பவாச்சும் எட்டிப்பாக்கும் - அட
எங்க ஊரு மந்திரிகூட
நம்ம சாதிதேன்!

- கி.வினோத்
04/07/2003.

இலையுதிர் காலம்

முகத்தளவில் நாணம்
விழியளவில் கனவுகள்
தோலளவில் அரிதாரம்
எல்லாம் பழகிற்று
நூறுமுறை சுயம்வரம் நின்றதில்!
இலையுதிர் காலம்
இழுத்துக்கொண்டே செல்வதில்
வரவிருக்கும் வசந்தம்
வெகுவாய் இனிக்குமோ?

-- கி.வினோத்

சிறியதாய் என்னுலகம்

நான்கைந்து பட்டாம்பூச்சிகள்,
பறிப்பதற்கு ஏதுவாய்
ஈரைந்து மலர்கள் போதும்
என்னுலகிற்கு இப்பொழுது!
இவை கடந்து, தவழ்ந்து
மிக மெதுவாய்தான் வருவேன்
இரைச்சலான வெளி உலகிற்கு!

-- கி.வினோத்

பூ காதல்

வான் வெளியில்
மிதப்பதுவாய் இருந்தது.
பிறகு...
பூ தொடும் ஆசை
எனக்குமுண்டு!
எனினும்
ஒரு பூவிடமே
எனை தொடும் வேகம்
அதிசயம்தான்!!
கவிதை சுவாசிக்கும் ஆசை
கவிஞனுக்கு இயற்கை.
ஒரு கவிதையே
கவிஞன் செதுக்க விழைவதில்
இலக்கியமாகிறது அந்த சேர்க்கை!!!
-- காதலுடன்
கி.வினோத்

காதலன்றி வேறேது

ஒவ்வொருமுறையும்,
கலைத்துப்போட்ட சீட்டுக்கட்டினுள்,
உன் பெயர் சொல்லி
உருவியதனைத்தும்
"காதல்" என்றது
வேறெவர்க்கும் தெரியாது
எனக்குமந்த
கூண்டுக்கிளிக்கும் தவிர!
உனக்கும் தெரிவிக்க
அந்த கிளியே வரும்
புறாவாய் நாளை!

--கி.வினோத்

பேச்சுவார்த்தை

இன்றைக்கும்
உன் மௌனத்திலிருந்து
துவங்கியது
என் மௌனத்தில்தான்
முடிந்தது
நேற்றைபோலவே

-- கி.வினோத்