Monday, December 24, 2012

புதிய புரட்சி


புதிய புரட்சி

பாரதியும் பகத் சிங்கும்
பிறப்பெடுத்தாலும்
புதியதொரு புரட்சிக்கு
புறப்படுவார்கள்
பெண் விடுதலை தேடி!

தலைப்பு தீ

தலைப்பு செய்திகளில் தகிக்கும்
கற்பழிப்பு பற்றிய தீ
தணிந்து மறந்துவிடும்
அடுத்த முறை
தலைப்பில் வரும் வரையோ
அடுத்தது உன் வீட்டின்
கதவு தட்டும் வரையோ!

விலங்கினம்


தெரு நாய்களுக்கு நிகராய்
தென்படும் இடமெல்லாம்
வன்புணர்ச்சி கொள்ளும்
மிருக இயல்பு ஏன்?

நவீனம் நோக்கி
நூற்றாண்டுகள் நகர்ந்தும்
போகத்தின் வடிகாலாய்
பெண்மையை ஸ்தாபிக்கும்
ஆணாதிக்க சமுதாயமா?

காலம் கடந்த நீதியும்
கடுமையான தீர்ப்பு பெறாத
விலங்கினத்தின் விடுதலை வாழ்வும்
நடைமுறை நகங்கள் நசுக்கி
நெடுந்துயரில் தள்ளப்படும்
கற்பிழந்தவரின் வடுக்களுமா?

காக்கும் கடமையை
கழுவிலேற்றி பின் கைகட்டி
பார்க்கும் நிலைமை
தரும் அசட்டுத்தனம்
துளிர்விடும் துணிச்சலா?

நாடாள்வது பெண்ணாயினும்
விபத்தில் வீழ்ந்தவளின்
துயர் துடைக்கவோ அன்றி
துணை நின்றிடும் மக்களை
தணிக்க திராணியற்ற
அரசக் கோமாளிகளோ?

எதுவாயினும் எங்கள்
உயிர் பூக்களின் இதழ்கள்
முற்றிலும் உதிர்வதற்குள்
வினை செய்த விலங்கினத்தை
வேட்டையாட வகை செய்குவோம்!

Tuesday, October 02, 2012

மகாத்மா காந்தி பிறந்த நாள்


நாடே பரபரப்பாய்
பற்றி எரிகின்றது
ஊழல் உச்சம்
அரசியல் அசிங்கம்
எதிர்மறை அரசு
செயலற்றதாகவோ
செயல் பதற்றமாகவோ
அனைத்தும் அமைதியாக
கவனித்தபடி கூண்டுக்குள்
மகாத்மா காந்தி சிலை!

-----------


ஒரு மகாத்மாவினால்
வெள்ளையனை
வெளியேற்ற முடிந்தது
ஒராயிரம் மகாத்மாக்கள்
இருந்தும்
காப்பாற்ற இயலாமல்
பரிதவிக்கும் நிலை
நம் நாட்டிற்கு!

Sunday, September 30, 2012

சாட்டை


சில பல பொத்தல்களுடன்
சமுதாய சிக்கல்களுக்கு
சாட்டையடியாகவும்

மலரும் தலைமுறை
பம்பரத்திற்கு உந்துசக்தியாய்
சுழற்றும் சாட்டையெனவும்

ஆசிரியர்!

Tuesday, September 04, 2012

பந்தயத்தின் இரு பக்கம்


பதைத்து பரிதவித்தது பெற்றமனம்
முட்டி முதல் மூன்றாவது எட்டுவாளோ?

சிரித்து சுற்றுபுறம் சிலாகித்தது
போட்டி என்பதறியாத பிஞ்சுமனம்

நடை மேடை


வாகன இரைச்சலுக்கிடையில்
வானம் பார்த்த இரவுகள்

விதியோ பிறப்பின் சதியோ
வீதியோர வாழ்க்கை

விடியலில் புலப்பட்டது வழி
நம்பவேண்டும் நடைமேடை துறக்க

உழைப்பும் நாணய முயற்சியும்
உயர்த்தும் கூரை நிழலுக்கு

Wednesday, August 15, 2012

குடிமகனும் முடிமன்னனும்

ஒற்றை ஒலிம்பிக் மெடல்
கிரிக்கெட் உலகக் கோப்பை
அயல்நாட்டில் இந்தியனின் சாதனை
எளிதில் உணர்ச்சி வயப்படும் -
குடிமகன்!

மாநிலம் தழுவிய கலவரம்
நிலம் புகுந்த இரயில்
பரவலாய் வெடிக்கும் உயிர்கள்
எதிலும் சலனமற்ற முகம் -
முடிமன்னன்!

சுதந்திர தினங்கள்

விடுமுறையாயினும் விடியலில் குளித்து
கொடியேற்றம் காண பள்ளிக்கு விரைந்து
சட்டைப்பையில் காகிதக் கொடியும்
ஓட்டை வாயில் மிட்டாய் கறையுமாக
சுதந்திர தினங்கள்!

விடுமுறையொன்று அதிகமென சுகித்து
கொடியேற்றம் காண டிவி உயிர்ப்பித்து
மொட்டை தலைப்பில் பட்டிமன்றம்
குட்டை பாவாடையில் நடிகை பேட்டி
சுதந்திர தினங்கள்!

எதற்கென கொண்டாடுவது இதை
கோடிக்கணக்கில் சுரண்டிய பணமும்
அலைக்கற்றை, விளையாட்டு, கல்வி
விலைபோன நீதியும் ஊழலில் உழன்று
சுதந்திர தினங்கள்!

எனக்கென காரணம் உண்டு
விடுதலை வேட்கையின் வரலாறு நினைக்கவும்
இளம்தலைமுறைக்கு தேசபக்தி புகட்டவும்
தூரத்து விடியலை நம்பியும் வேண்டும்
சுதந்திர தினங்கள்!

எரிபொருளின் எட்டா விலை

வேலையிடம் சேர்ப்பிக்கும் பேருந்தும்
காய்கனி சுமக்கும் லாரிகளும்
வயிறு நிறைக்கும் சமையலடுப்பும்
எரிசக்தியின்றி எம்
கண்ணீர் சக்தியிலா இயங்குகின்றன
சொல்லடி சிவ சக்தி!

இன்றைய மாணவன்

தெருவிளக்கொளியில் அறிவு
தாகம் தணித்து
பெருங்கிணறு தாண்டி
பெரியதொரு படிப்பு
பின்னர்
சிறு தோல்வி தாளாமல்
புல் தடுக்கி வீழ்ந்து
தன்னுயிர் தானே மாய்த்தது
பரிதாபமல்ல
பயங்கர கோழைத்தனம்
அதுவரை இறைத்த அறிவு
விழலுக்குதானோ?
  

Monday, August 13, 2012

நிலைப்பாடு



அரசியல் தர்மம்,
பொதுவுடைமை,
அவையடக்கம்
எனும் உடைகள் களைந்து
நிர்வாணம் பழகிய
விலை மகளென
வெட்கம் துறந்தது
இன்றைய அரசியல்வாதியின்
நிலைப்பாடு !

இடைவெளி


மெலிதாய்
துகிலென படர்கின்றது
புலப்படாத கண்ணாடி
உனக்கும் எனக்குமான
இடைவெளியில்!
இந்நாட்களில்
பலமுறை முட்டிமோதி
நெற்றி தேய்த்தோம்
குறைகின்ற
தொடு தூரத்தில்!

இரு வரிக் குரல்


மூத்தவள்
முடிந்தவரை கூச்சலிட்டு
இயன்றவரை
நெட்டித்தள்ளி
போட்டியிடுவாள்
இளையவனுடன் - அவனோ
உணவுப் பரிமாறுகையில்
இரு தட்டுக்கள் நீட்டுவான்
அவளுக்கும் சேர்த்து!
அவனது இரு வரிக் குரல்
அம்மா, அக்கா!

இதுவும் கவிதை


கை தூக்கி
உதடு குவித்து
புருவம் நெரித்து
புன்னகைத்தே
பொய் கோபம்
கொள்வாள் மகள்,
எனது எதிர்மறை
வினாக்கள்
சீண்டும்பொழுது!

Sunday, June 19, 2011

உயிரிலே கலந்தது

இதற்குதான்
அதற்குதான் எனக்
காரணங்கள் கற்பித்து
கற்றை கற்றையாய்
சேர்த்தேன்
கோடியும் நூறு கோடியும்
தாண்டியபின்
எதற்குதான் என
புரியாமல்
உயிரிலே கலந்தது!
எப்படியும்
சில கோடிகளில்
சரி செய்துவிடலாமென
நினைக்கையில்
நெற்றிப் பொட்டில் அறைந்தது
நியாயம்
சிபிஐ வடிவில்!!!

தேர்தலும் முடிவும்

சில சமயங்கள்தான்
நாயகர்கள் இந்த
நாட்டின் மக்கள்

சிறிதாய் சந்தோச
இறுமாப்பு
விரலில் மை ஏறியபின்

சனங்களின் நியாயமாய்
சனநாயகம்
சிரிக்கின்றது ஒருமுறை

முடிவுகள்
மூடிய மனங்களின்
நியாய முகம்

தோற்கவில்லை
மக்களாட்சியின்
மதிப்பும் பொருளும்

முரண்

ஆங்காங்கே
அமைதிப் பூக்கள் மலர
நடுவது நடந்துக்கொணடேயிருக்க
எங்கெங்கும்
பரவலாய் பதற்றமுடன் உயிர்
பறிப்பதும் தொடர்ந்துக் கொணடுதானிருக்கு!

இயல்பு

ஒரு சில சிம்மங்களும்
சில நூறு நரிகளும்
பல்லாயிரம் மந்தையாடுகளுமென
மிருக இயல்பு
மனிதனுக்கு!

பசிக்கு மட்டும் புசிப்பது
பகிர்ந்து பதுங்குவது
தனது குடும்பம் பிரதானமானது
மனித இயல்பு
மிருகத்திற்கு!



வானவில் தேசம்

இங்கு
கனவுகளும்
கவிதைகளும்
நியாயங்களும்
நடைமுறையும்
உரிமைகளும்
உயர்வுகளும்
படிப்பறிவும்
பாதுகாப்பும்
உயிர் வாழ்தலும்
உயிர் விடுதலுங்கூட
வெவ்வேறு நிறங்களில்
சமன் படாத சமூகமாய்
வானவில் தேசமிது!

கடந்த ஞானம்

எனது முதுகுக்குப்பின்
இதுவரை சேகரித்த
பெரும் சொத்துக்கள்
விழல் நீரெனவும்
வீணடித்த சிற்றின்பங்கள்
உயிரிழப்பாகவும்
உருமாறின!
பாதை திருத்திய பயணம்
மறுமுறை துவங்க
எஞ்சிய மணித்துளிகள் போதாது!