Friday, June 02, 2006

விடியலுக்கு வெளிர் பகலவன்
இரவுக்கு குளிர் நிலவவள்
இயல்பானதொரு பொருத்தம்தான்
நீயும் நானும் கைக்கோர்த்தபின்!
எரிதழல் நிறைத்தசூரியனின் கர்ப்பமும்
திகைப்புகள் போர்த்தியநிலவின் நேர்த்தியும்
உனக்கும் எனக்குமிடையில்!
வலி எடுக்கும் முன்னரே
வலி 'எடுக்கும்' முனைப்பும்,
விரல் தொடும் முன்னரே
விழைந்து நிற்கும் ஆசையும்,
தூரம் இருக்கையில்கூட
நினைவுகளின் நெருக்கத்தில்,
என நீள்கிறது இந்தக் கவிதை!
முதல் ஆண்டு முதல் படிதான்,
மீன்டும் ஒருமுறை
மழலை பெசலாம்
வரமாய் கிடைதிடும்...குட்டி கவிதையுடன்!!!

Friday, April 07, 2006

"ஸ்கேன் செய்தல்" எனும் கவிதை

விரல்பட்ட நத்தையாய்
சுருண்டு சிறுத்து
சகலமும் உரித்து
சின்னஞ்சிறு மொட்டென
தாய் மடி சேர்ந்து
மிதப்பதுவாய் இருந்தது!
கறுப்பு வெள்ளையோ
கட்டமும் வட்டமுமோ
கலந்து தீட்டியதாய்
கைகால்கள் பார்க்கையில்
எனதுள்ளும் உயிரணு பிரிந்து
உன்னத உயிர் சனிப்பது (தை)
எதனுடன் ஒப்பிடுவது
இன்னொரு தாய்மை தவிர
இந்த புள்ளியில்தான்
எனது சேய் மனமும்
தாய் மனமும் இணைந்ததுவோ!
--கி.வி

இதுவும் ஒரு ராகம்!!!

என் முன்னே
கல்வியுருவாய் அந்த வீணை
நான் வாசிக்கும் முன்னரே
நரம்பினை அறுத்து
பாழ்செய்தது இந்த வறுமை
கேட்டு சுகித்திருக்கின்றேன்
உயிர் கிள்ளும்
ஆலாபனையாய்
அதே வீணை நாதம்!
அரை சாண் வயிற்றின்
அதிர்வுகள் மீறி
ஒலித்துக் கொண்டிருக்கிறது
அதே வீணை நாதம்!
இன்றெல்லாம்
மயக்கத்தில் கனவு
தெய்வம் ஒருவன் - எனக்கு
வீணை அளிப்பதாய்!
-- கி.வி

அமிர்தம்

நேற்றைய மீதங்களில்
அமிர்தம் தேடுவது,
பழைய சோறிலிருந்து
படுக்கை வரை
வந்திருக்கிறது!
-- கி.வி.

புதியதொரு கூடு

எனது கை கால்களை பிடுங்கி
எறிந்தது போல் இருந்தது,
ஏழெட்டு மரங்களை
எனதாகும் நிலத்திலிருந்து
எடுத்து செல்கையில்!
சில பல குடும்பங்கள்
இருந்திருக்கும் அந்த
உயர் கூடுகளினூடே
எனக்கெனவே
புதியதொரு கூடு
பின்னுவதில்
மறந்து மகிழ்ந்தது
மனித மனம்
-- கி.வி.

ஆதங்கம்

ஆணென நான் கொண்ட
வேடத்தை
வெகுவாய் வெறுக்கின்றேன்!
பெண்ணென உருகொண்ட
என்னவளால்
உணர முடிகிறது -
தெய்வீகமான இசை கேட்டும்
மழை சாரலென குரல் கேட்டும்
மெது மெதுவாய் நடமாடும்
இவையெதுவும் இதுவரை
கண்டிராத
எங்கள் சிறு மொட்டினை
--கி.வி

Tuesday, February 14, 2006

பட்டாம்பூச்சி தேவதை



முதற்கணை வீசியதில்

முதன்முறை கொஞ்சியதில்

முத்தாய்ப்பாய் கைப்பற்றியதில்

முறுவலுடன் இதழ் பதித்ததில்

முழுவதுமாய் மெய் சேர்கையில்

என அவ்வபொழுது

தேவதையாகின்றாய்

பட்டுப் புழு

பட்டாம்பூச்சியாவது போல்!

இன்னும் எத்தனை

பட்டுப் புழு உன்னுள்?

-- கி.வி

14/02/2006

Monday, January 30, 2006

அதிசய விருட்சம்

வளர்ந்து,
கிளைவிட்டு,
உடலெங்கும் முகிழ்ந்து,
பூத்து சாமரம் வீசியது
அந்த அதிசய விருட்சம்!
எனது தயக்கத்திற்கும்
உனது தயக்கத்திற்குமான,
எனது இசைவிற்கும்
உனது இசைவிற்கும்
இடையிலான நொடிப்பொழுதில்
அசுரத்தனமாய் வளர்ந்தது
அந்த அதிசய விருட்சம்!

-- கி.வி

Wednesday, December 28, 2005

தனிமை

இதுநாள்வரை
எனது தனிமை
உருவமற்று,
உணர்வு பொங்க அலைந்தது
என்னுடன்!
திடுமென
உன் உருவம் பெற்று
என் பழையன கிழித்து
வலம் வருகிறது
என்னுடன்!
இனியும்
எவ்வாறு அழைப்பேன்
அதை தனிமையென்று!!
-- கி.வினோத்
25/12/2005

தெய்வீகம் நோக்கி

உயிர் கொடுக்கிறாய்
சிருஷ்டி உனது இயல்பு இனி!
விளைநிலமாய் மாறி
விருட்சம் வளர்க்கிறாய்
ஏனைய வலிகள்
எதிர்கொள்ளும் மண்ணுலகமாகிறாய்!
இருவருக்குமாய் புசித்து,
இருவருக்குமாய் வசித்து
அருள் மழை பொழிந்து
பால் மழை சுரந்து
தெய்வீகம் நோக்கி
விரைகின்றாய்!
உன் உதிரம் உதிர்த்து
உயிர் வலியின்
கடைநிலை சென்று
மழலையினை ஈன்றாய்!
உனக்கு
உலகின் உயர்ந்த பரிசு -
நீ ஒரு "தாய்"!!!
-கி.வினோத்
25/12/2005

Thursday, December 15, 2005

காத்திருத்தல்

வானம் பார்த்த இரவுகளில்
எண்ணி எண்ணி
தீர்ந்து போயின
நட்சத்திர சிதறல்கள்!
விரைவினில் வந்துவிடு
இன்னுமொரு வானமில்லை!!!
-- கி.வினோத்
26/06/2003

அழைப்பிதழ்

முரசா இது?
நம் மணநாளை...
ஊரறிய பரைசாற்ற!
மயிலிறகு ஓலையிது
தெரிந்தவருக்கெல்லாம் கொடுத்து வா!

இரு இதயம்
இணையும்பொழுது
எவருமறியாவிடில்
மூடிய புத்தகமாகிவிடும்.

நம் வழியெங்கும்
வாழ்த்துக்கள் நிறைதல்
பிரவாகமாய் வழிந்திடும்
நீர் வீழ்ச்சிக்கு ஒப்பாகும்...
நனையட்டும் நெஞ்சங்கள்!!!
-- என்றென்றும் அன்புடன்
கி.வினோத்

ஈர்ப்பு

இருபதாண்டுகள் மேலாக
சிறிது சிறிதாய்
சேர்த்து வைத்திருந்தேன்...
பல கோடி பூக்களை!
இருபதே நாட்களில்
பூங்கொத்தாய் பறித்துவிட்டாய்!
எளிதில் நாம்
அருகாமை வந்தது பற்றி
இயற்பியலில் -
புவியீர்ப்பு,
காந்த ஈர்ப்பு விசை
என்றெல்லாம் சொல்கிறார்கள்!
இருப்பினும்...
இன்னும் பல புதிர்கள்
இருக்கக்கூடும்,
இனி வரும்
நம் நாட்களை
அலங்கரிக்க......
-- ஆர்வமுடன்
கி.வினோத்

சிநேகம்

என்னுள்
ஒரு சிநேகிதன் வளர்த்து
உலகிற்கு வெளியிட்டிருக்கிறாயம்மா
நீ என்னருகினில்
இலாதொரு தருணம்தான்
புரிந்தது
உன்னுள்ளும்
ஒரு சிநேகிதி வளர்த்து
என்னுடன் அளவளாவி வந்தது!
-- சிநேகமுடன் வினோத்

காவிரி

வரி வரியாய்,
எலும்பு துருத்திய
ஏழையின் மார்பாய்,
காய்ந்த மணல்வெளியுடன்
காவிரியும் அதன்கரையும்!
பெருமாள் ஆற்றில் இறங்க,
ஆடிக்கொருமுறை
மக்கள் பெருக்கை
மகிழ்விக்க,
தலைக்காவிரியில்
தறிகெட்டு மழைபெய்தால்
வெள்ளத்தினை சமன்செய்ய,
அவ்வபொழுது
வந்து போகிறது
ஆற்று நீர்
உறவுக்கார விருந்தாளிப்போல்!
-- கி.வினோத்
22/01/2005

மின்சாரம்

சிலநூறு வருடங்கள் முன்
உனை பார்த்து,
உன் ஒரு ஸ்பரிசம் சுகித்திருந்தால்,
எடிசனுக்கு முன்
எனது பெயர் பதிந்திருக்கும்!
மெல்லிய வருடலில்
உணர முடிந்தது
உனது நரம்புகளின்வழி
மின்சாரம் பாய்வது!
-- கி.வினோத்

தடம்

கடற்கரையில்
ஏகத்திற்கும்
கால்தடம் பதிந்திருக்க
ஒவ்வொன்றிலும்
என் கால் வைத்து
பொருந்திப் பார்க்கிறேன்
முந்தைய
மாலைப் பொழுதுகளில்
நாமிருவரும்
இணைந்து நடந்ததில்
விட்டுச்சென்ற தடங்களை
அதற்குள்ளாகவா
அலைகள் அழித்திருக்கும்?
-- கி.வினோத்