Sunday, December 09, 2018

கலியுக பிரம்மாவே!


நான் நாயெனவும்
தெருதான் எனக்கான வாழ்வியல்
எனவும்
தீர்மானிக்கும் நீ
மனிதனாய் பிறவி எடுத்தும்
மிருக மனதுடனே அலைகின்றாய்

மற்றவனை கீழ்தரமாய் சிருஷ்டிக்கும்
கலியக பிரம்மாவே
உன்னுடனே போகட்டும்!
உன் உதிரத்தில் உதிர்ந்த
இளைய தலைமுறை
சமவெளியில் பயணிக்க
எம்முடன் கைகள் கோர்க்கட்டும்!

--கி.வினோத்

விரைவு ஊர்தி

நூறாயிரம் முறையேனும் நினைத்திருப்பேன்
இது நாள் வரையிலான பயணம்
விரைவு ஊர்தியாய் பறந்தது போலிருக்கும்

எந்தையர் தலைமுறையின் பயணம்
படிப்படியாய் மேலேறிய அனுபவம்
வழி நெடுகிலும் இளைப்பாற நேரமுடன்
உச்சி சேருகையில் ஆத்மார்தமான திருப்தி

எந்தன் தலைமுறையின் பயணமோ
மின் தூக்கியில் மேலேறும் அனுபவம்
வழி தோறும் இரசிக்க நேரமில்லை
உச்சி சேருகையில் ஆயாசமான அயற்ச்சி

மேலிறிருந்து கீழ் நோக்கு கையில்
இலக்கு அல்ல அதை அடைய
பயணிக்கும் பாதைதான் பாடமென புரிகின்றது!


--கி.வினோத்

Saturday, October 20, 2018

மின் தூக்கி பயணம்

பத்து நொடி பயணம்தான் பலமுறை
பிந்தைய பயணிகள் பரவச்செய்த
வாசம் இன்னும் விட்டகலவில்லை

மேல்தட்டு நங்கையின் மேல்பூச்சு வாசமோ
உழைத்து களைத்தவரின் வியர்வையின் மணமோ
முன்னவரின் குணாதிசயம் உணர்த்திவிடும்

விரைய வேண்டிய நேரம் மெதுவாகவும்
ஓய்வாக செல்கையில் துரிதமாகவும்
ஏற்றி செல்லுமிந்த மின் தூக்கி


மனிதப் பரிணாமம் பற்றியும் 
வாழ்க்கை சமனையும் போதிக்கும்
ஆசானிந்த மின் தூக்கி பயணம்

-- கி.வினோத்  

Monday, August 21, 2017

தாறுமாறான தொடர்பயணம்

இலகுவாய் இலக்கை
அடைவேனென்றெண்ணி
அமர்ந்தேன் ஓர் இரயிலில்.

தடங்கல்களும் தவறுமாய்
தறிகெட்டு போனது பயணம்
ஒவ்வொரு நிறுத்தத்திற்கிடையிலும்

தாறுமாறாய் தடம்மாறிய பயணம்
ஒரு நிலைக்குமேல் மறுவழியின்றி
தொடர்பயணமாய் நீண்டது

என்னிடம்தான் அடங்கி உள்ளது
எவ்வாறு எதிர்கொள்ளவேண்டுமெனும்
துணிவும் தெரிவும்

இழிநிலை நினைந்து நொந்து
வழி  நெடுகிலும்
அழுதே கழிக்கலாம் அன்றி

கடந்திராத பாதைகளின் கவினையும்
தெரிந்திராத முகங்களின் தொடர்பையும்
பாடமென கருதி இரசிக்கலாம்

இன்றோ நாளையோ
இலக்கை  அடைந்தபின்
இதுவும் கடந்தே போகும் நினைவுகளாய்

இயலாமை

இன்றாவது
எப்பாடுபட்டேனும்
எனது ரொட்டியை சிதறடிக்காமல்
இலாவகத்துடன் முடித்தல்வேண்டி
முற்பட்டேன் முடியவில்லை

ஏனைய முறைகள் போலவே
கவனம் ரொட்டியிலும்
பிறர் பார்வையிலும்
கழிந்ததில்
சுவையினை மறந்து
எனக்கான சிறுசுகத்தினையும் துறந்து
ஏமாற்றமே மிஞ்சியது

பசிக்கு புசிப்பவன்
பிறர் கண்களுக்காக வாழ்வதில்லை

Wednesday, August 09, 2017

வார்த்தை கீறல்கள்

நேசம் கலந்து
பாசம் பிசைந்து
தாபம் இணைத்து
காதல் கரைத்து
கோபம் களைத்து
வெறுப்பு ஒதுக்கி
அகம் சுருக்கி
அகிம்சை விலக்கி
அன்பெனும் சிலை வடித்ததில்
சிந்திய வார்த்தைகளின்
கீறல்கள் ஆழப் படிந்தன
முழுமையின்மையும் அழகுதான்!

Wednesday, April 12, 2017

நிர்மூலமாகும் நிர்வாணம்

நனையாத நிலம் நம்மை நசிக்கின்றது
நதிகளின் வழி நம் கண்ணீர் கசிகின்றது
நன்செய் புன்செய் கடன் நெஞ்சையடைக்கின்றது
நமையாள்பவர்க்கோ கேலிக்கூத்தில் நேரம் கழிகின்றது
நாதியற்ற நம் ஓலம் டெல்லியில் கரைகின்றது
நீதியற்ற அரசு நிர்வாணமாக்கி எமை நிர்மூலமாக்கின்றது!

-கி. வினோத் 

Wednesday, March 01, 2017

தற்காப்பு!

வாடிவாசல் முதல் நெடுவாசல் வரை
வீடு வாசல் விடுத்து
தகிக்கும் தமிழினம்!
மாடும் மாண்பும் நிலைக்க குரலெடுத்தவன்
காடும் உழவும் காக்க விரைகின்றான்!
அழிவிற்கு துணைபோவது தியாகமெனவும்
அநீதி எதிர்ப்பது தேசத்துரோகமெனவும்
புதுமொழி சொல்கிறார் கோமாளியவர்!
இதயம் பிளந்து குருதியெடுப்பதும்
இயற்க்கை பிழிந்து வளங்கள் அழிப்பதும்
ஈனச் செயல்கள் என்று புரியுமோ?
மாற்றம் வேண்டிய போராட்டம் முன்னது
ஏற்றம் போற்றும் தற்காப்பு இன்றையது!
- கி. வினோத்

Sunday, January 08, 2017

மானத் தமிழனடா

மானத் தமிழனடா நாங்கள்
முன்பொரு காலத்தில்

வீரத்தையும் வேகத்தையும் விதைத்து
நெஞ்சினில் ஈரத்தையும் தெளித்து
நேர்மையும் நேசத்தையும் கலந்து
மானத்தையும் ரோசத்தையும் கரைத்து
வளர்ந்த வெகுமானத் தமிழனடா நாங்கள்

ஆறுகளின் ரேகைகளிருந்தும்  நீர்வரவின்றி
அணல்மின் நிலையமா தமிழ்நாட்டில் திணித்து
மீத்தேன் எடுக்கலாம் தஞ்சை பசுமையழித்து
சேது சமுத்திரம் ஒரு விளையாட்டு போலாகி
விஷமருந்திய விவசாயிகள் பலநூறாகி
வாழ்க்கையோடு பிணைந்த ஜல்லிக்கட்டும் தொலைத்து
அம்மாவை இழந்ததும் சின்னம்மா துதிபாடி
இடுக்கண் அனைத்தும் இன்டர்நெட் மீம்ஸ் வரைந்து
இன்றைய தேதியில்  
அவமான தமிழனடா நாங்கள்

--கி.வினோத்

ஜல்லிக்கட்டு

ஆறேழு வயதிருக்கும்
ஆக்ரோஷமான காளைகள்  அடக்கும்
ஜல்லிக்கட்டு பார்த்த முதன்முறை.

தெருவெங்கும் திருவிழாக்கோலம்
தலைகள்மட்டுமே  தட்டுப்படும் நெரிசலில்
தந்தை தோள் மீதேறி ஆசனம்.

வகை வகையாய் மாடுகள் சீறின
அடுத்ததடுத்து ஆண்பிள்ளைகள்
அடக்கமுற்பட்டது பெரும் சாகசம்.

வேகம் விவேகம் பலமும் பிரயோகிக்கும்
வீர விளையாட்டு என படித்ததும்
வேடிக்கை பார்த்ததும் சிலிர்ப்புதான்.

வளர்ந்துவந்த வயதுகளில்
தமிழ் திரையிலும் தொலைக்காட்சியிலும்
தவறாமல் கண்டதுண்டு ஜல்லிக்கட்டை

திடுமென திருந்திய சிலசாரார்
மிருக வதையெனவும் மனித வன்மமெனவும்
தடைவிதித்தது தமிழனுக்கு பெரும் துரோகம்

இனியென் பிள்ளைகளுக்கு
எமது வரலாறு எடுத்துரைக்கயில்
எங்கணம் விளக்குவது இந்த வீர விளையாட்டை?    

Sunday, September 18, 2016

அனல் பொங்கும் காவிரி

வான் பொய்ப்பினும் தான் பொய்யாதோரு மகாநதி
தானும் பொய்த்து  தன்னை சுற்றத்தவரையும் பொய்த்து
தகிக்கின்றது 

வேற்றுநாடுகளுக்கிடையிலும் சுமுகமாய் தவழும் நதிகளுண்டு 
வேற்றுமொழியாயினும் ஒரே தேசத்தினுள்ளோ உணர்ச்சிபிழம்பாய் நதிபற்றி 
எரிகின்றது 

மலைகளில் மேற்கு தொடர்ச்சியின் வளத்தினை சேர்த்து மேகம்தொட்டு 
மழையாய் பொழிந்து பிரவாகமெடுத்து பூம்புகாரில் கலந்திடாமல் 
தவிக்கின்றது 

வளர்ச்சியெனும் வேடமிட்டு கரைநெடுகிலும் அமைத்ததென்ன 
விளைநிலமா இல்லை உயிர் உறிஞ்சும் தொழிற்சாலைகள்தான் இன்று 
புகைக்கின்றது 

மடியினை சுரண்டி மண்ணள்ளி விற்பதுவும் தாயின் தொப்புள் 
கொடியினை விற்று வாழ்வதும் ஒப்பாகும் என்செய்ய அவளுக்கோ 
தோலுரிகின்றது 

கிளர்ச்சி தூண்டும் சங்கங்களும் அதில் அரசியலாக்கும்
இகழ்ச்சி தரும் நிகழ்வாய் மௌன அரசுகளும் நீதிக்கொன்று 
துடிக்கின்றது

அணைதடுத்து இயற்கையை இறுக்கும்  ஒருபுறம் 
மனைவிடுத்து  விவசாயம் கொன்று நீருக்கிறைஞ்சும் மறுபுறமென 
கொதிக்கின்றது 

துருவம்போல் எதிர்க்கரைகள்கொண்டு பிரிந்திட்ட நதியோ 
கர்வம்பூண்ட மானிடரின் விருப்புக்கு வதங்கி வெந்து 
வழிகின்றது 

வரைமுறை தாண்டி முட்டிக்கொள்ளும் பாவிகளுக்கு தெரியாது 
தலைமுறை தாண்டி தவறிழைப்பது நதியோ மெல்லமடிந்து 
மறைகின்றது



Sunday, September 11, 2016

துணை

எத்தனையோ தூரம் இணைந்துதான் கடந்தாயிற்று
எத்தனை வகை பயணம் இனிதாய் முடித்தாயிற்று
சில பொழுதுகளில் சினந்து பின் கசந்து
பல பொழுதுகளில் களித்து பின் கலந்து
என்றுமே மிதிவண்டியில் இரு சக்கரங்களாய் நாம்
ஒரே கோட்டில் உந்துகிறோம் ஒருவருக்கொருவர்
ஒரே பயணம் பகிர்ந்துகொண்டே

Wednesday, August 10, 2016

தனிமை

எனது அருகாமை வெற்றிடங்களில் நீயே பரவியதால் காற்றாகவும்
எனது நினைவலைகளின் நடுவில் நீயே நிரம்பியதால் சிந்தனையாகவும்
எனது தூக்கத்தின் தவிப்பில் நீயே தோன்றியதால் கனவாகவும்
எனது கைபேசியின் அழைப்புகளில் நீயே நிறைந்ததால் பேச்சாகவும்
எனது தனிமைக்கு இணையாக நீயே நிற்பதால் நானாகவும்
தள்ளி சென்று பிரிந்ததற்கான அறிகுறிகளின்றி அருகில் வாழ்கின்றாய்!
- கி.வினோத்