வான் பொய்ப்பினும் தான் பொய்யாதோரு மகாநதி
தானும் பொய்த்து தன்னை சுற்றத்தவரையும் பொய்த்து
தகிக்கின்றது
வேற்றுநாடுகளுக்கிடையிலும் சுமுகமாய் தவழும் நதிகளுண்டு
வேற்றுமொழியாயினும் ஒரே தேசத்தினுள்ளோ உணர்ச்சிபிழம்பாய் நதிபற்றி
எரிகின்றது
மலைகளில் மேற்கு தொடர்ச்சியின் வளத்தினை சேர்த்து மேகம்தொட்டு
மழையாய் பொழிந்து பிரவாகமெடுத்து பூம்புகாரில் கலந்திடாமல்
தவிக்கின்றது
வளர்ச்சியெனும் வேடமிட்டு கரைநெடுகிலும் அமைத்ததென்ன
விளைநிலமா இல்லை உயிர் உறிஞ்சும் தொழிற்சாலைகள்தான் இன்று
புகைக்கின்றது
மடியினை சுரண்டி மண்ணள்ளி விற்பதுவும் தாயின் தொப்புள்
கொடியினை விற்று வாழ்வதும் ஒப்பாகும் என்செய்ய அவளுக்கோ
தோலுரிகின்றது
கிளர்ச்சி தூண்டும் சங்கங்களும் அதில் அரசியலாக்கும்
இகழ்ச்சி தரும் நிகழ்வாய் மௌன அரசுகளும் நீதிக்கொன்று
துடிக்கின்றது
அணைதடுத்து இயற்கையை இறுக்கும் ஒருபுறம்
மனைவிடுத்து விவசாயம் கொன்று நீருக்கிறைஞ்சும் மறுபுறமென
கொதிக்கின்றது
துருவம்போல் எதிர்க்கரைகள்கொண்டு பிரிந்திட்ட நதியோ
கர்வம்பூண்ட மானிடரின் விருப்புக்கு வதங்கி வெந்து
வழிகின்றது
வரைமுறை தாண்டி முட்டிக்கொள்ளும் பாவிகளுக்கு தெரியாது
தலைமுறை தாண்டி தவறிழைப்பது நதியோ மெல்லமடிந்து
மறைகின்றது
No comments:
Post a Comment