Monday, August 21, 2017

தாறுமாறான தொடர்பயணம்

இலகுவாய் இலக்கை
அடைவேனென்றெண்ணி
அமர்ந்தேன் ஓர் இரயிலில்.

தடங்கல்களும் தவறுமாய்
தறிகெட்டு போனது பயணம்
ஒவ்வொரு நிறுத்தத்திற்கிடையிலும்

தாறுமாறாய் தடம்மாறிய பயணம்
ஒரு நிலைக்குமேல் மறுவழியின்றி
தொடர்பயணமாய் நீண்டது

என்னிடம்தான் அடங்கி உள்ளது
எவ்வாறு எதிர்கொள்ளவேண்டுமெனும்
துணிவும் தெரிவும்

இழிநிலை நினைந்து நொந்து
வழி  நெடுகிலும்
அழுதே கழிக்கலாம் அன்றி

கடந்திராத பாதைகளின் கவினையும்
தெரிந்திராத முகங்களின் தொடர்பையும்
பாடமென கருதி இரசிக்கலாம்

இன்றோ நாளையோ
இலக்கை  அடைந்தபின்
இதுவும் கடந்தே போகும் நினைவுகளாய்

இயலாமை

இன்றாவது
எப்பாடுபட்டேனும்
எனது ரொட்டியை சிதறடிக்காமல்
இலாவகத்துடன் முடித்தல்வேண்டி
முற்பட்டேன் முடியவில்லை

ஏனைய முறைகள் போலவே
கவனம் ரொட்டியிலும்
பிறர் பார்வையிலும்
கழிந்ததில்
சுவையினை மறந்து
எனக்கான சிறுசுகத்தினையும் துறந்து
ஏமாற்றமே மிஞ்சியது

பசிக்கு புசிப்பவன்
பிறர் கண்களுக்காக வாழ்வதில்லை

Wednesday, August 09, 2017

வார்த்தை கீறல்கள்

நேசம் கலந்து
பாசம் பிசைந்து
தாபம் இணைத்து
காதல் கரைத்து
கோபம் களைத்து
வெறுப்பு ஒதுக்கி
அகம் சுருக்கி
அகிம்சை விலக்கி
அன்பெனும் சிலை வடித்ததில்
சிந்திய வார்த்தைகளின்
கீறல்கள் ஆழப் படிந்தன
முழுமையின்மையும் அழகுதான்!

Wednesday, April 12, 2017

நிர்மூலமாகும் நிர்வாணம்

நனையாத நிலம் நம்மை நசிக்கின்றது
நதிகளின் வழி நம் கண்ணீர் கசிகின்றது
நன்செய் புன்செய் கடன் நெஞ்சையடைக்கின்றது
நமையாள்பவர்க்கோ கேலிக்கூத்தில் நேரம் கழிகின்றது
நாதியற்ற நம் ஓலம் டெல்லியில் கரைகின்றது
நீதியற்ற அரசு நிர்வாணமாக்கி எமை நிர்மூலமாக்கின்றது!

-கி. வினோத் 

Wednesday, March 01, 2017

தற்காப்பு!

வாடிவாசல் முதல் நெடுவாசல் வரை
வீடு வாசல் விடுத்து
தகிக்கும் தமிழினம்!
மாடும் மாண்பும் நிலைக்க குரலெடுத்தவன்
காடும் உழவும் காக்க விரைகின்றான்!
அழிவிற்கு துணைபோவது தியாகமெனவும்
அநீதி எதிர்ப்பது தேசத்துரோகமெனவும்
புதுமொழி சொல்கிறார் கோமாளியவர்!
இதயம் பிளந்து குருதியெடுப்பதும்
இயற்க்கை பிழிந்து வளங்கள் அழிப்பதும்
ஈனச் செயல்கள் என்று புரியுமோ?
மாற்றம் வேண்டிய போராட்டம் முன்னது
ஏற்றம் போற்றும் தற்காப்பு இன்றையது!
- கி. வினோத்

Sunday, January 08, 2017

மானத் தமிழனடா

மானத் தமிழனடா நாங்கள்
முன்பொரு காலத்தில்

வீரத்தையும் வேகத்தையும் விதைத்து
நெஞ்சினில் ஈரத்தையும் தெளித்து
நேர்மையும் நேசத்தையும் கலந்து
மானத்தையும் ரோசத்தையும் கரைத்து
வளர்ந்த வெகுமானத் தமிழனடா நாங்கள்

ஆறுகளின் ரேகைகளிருந்தும்  நீர்வரவின்றி
அணல்மின் நிலையமா தமிழ்நாட்டில் திணித்து
மீத்தேன் எடுக்கலாம் தஞ்சை பசுமையழித்து
சேது சமுத்திரம் ஒரு விளையாட்டு போலாகி
விஷமருந்திய விவசாயிகள் பலநூறாகி
வாழ்க்கையோடு பிணைந்த ஜல்லிக்கட்டும் தொலைத்து
அம்மாவை இழந்ததும் சின்னம்மா துதிபாடி
இடுக்கண் அனைத்தும் இன்டர்நெட் மீம்ஸ் வரைந்து
இன்றைய தேதியில்  
அவமான தமிழனடா நாங்கள்

--கி.வினோத்

ஜல்லிக்கட்டு

ஆறேழு வயதிருக்கும்
ஆக்ரோஷமான காளைகள்  அடக்கும்
ஜல்லிக்கட்டு பார்த்த முதன்முறை.

தெருவெங்கும் திருவிழாக்கோலம்
தலைகள்மட்டுமே  தட்டுப்படும் நெரிசலில்
தந்தை தோள் மீதேறி ஆசனம்.

வகை வகையாய் மாடுகள் சீறின
அடுத்ததடுத்து ஆண்பிள்ளைகள்
அடக்கமுற்பட்டது பெரும் சாகசம்.

வேகம் விவேகம் பலமும் பிரயோகிக்கும்
வீர விளையாட்டு என படித்ததும்
வேடிக்கை பார்த்ததும் சிலிர்ப்புதான்.

வளர்ந்துவந்த வயதுகளில்
தமிழ் திரையிலும் தொலைக்காட்சியிலும்
தவறாமல் கண்டதுண்டு ஜல்லிக்கட்டை

திடுமென திருந்திய சிலசாரார்
மிருக வதையெனவும் மனித வன்மமெனவும்
தடைவிதித்தது தமிழனுக்கு பெரும் துரோகம்

இனியென் பிள்ளைகளுக்கு
எமது வரலாறு எடுத்துரைக்கயில்
எங்கணம் விளக்குவது இந்த வீர விளையாட்டை?