Monday, August 16, 2010

வெந்நீர் மீன்கள்

தண்ணீரில் பிறந்து
தனக்கானதாய் உலகம் பழகிய
மீனினம் நான்

விரியட்டுமென் எல்லையென
புலம் பெயர்ந்தேன்
வெந்நீர் நிரம்பிய வேற்றுலகிற்கு

சில மீன்கள்
வெந்து விழுப்புண் பெற்று
வெந்நீர் மீன்களாயின

வேறு சில
வெம்மை பொறுக்காமல்
விவேகமாய் திரும்பின

பெரும்பாலானவை
வெம்மையும் பழகாமல் தண்ணீரும்
திரும்பாமல் தள்ளாடின

அனுதினம் புதிதாய்
கொதிநீர் ஊற்றபடுவதாய்
உணர்வு எனக்கு

தண்ணீர் தேசம் திரும்பி
ஆற வைக்கலாமென
நாட்கள் நீந்தப் பயில்கின்றேன்

Sunday, August 15, 2010

நூற்றாண்டு கனவு

அறுபத்தி மூன்றாகின்றது
அகவை - எம்
தாய் திருநாட்டின்
சுதந்திர தேவிக்கு!
முதல் பத்தில்
முதிர்ச்சியடைந்து
முயற்சிகள் பல கண்டது!
இடையில் இலக்கில்லாமல்
இன்னல்கள் நேர்கொண்டது!
இழுத்து செல்லும்
இதிகாசத் தலைவர்களின்
பரிகாச பாதக செயல்களுக்கு
அரசியலென பெயரிட்ட
நயவஞ்சகமும் கண்டது!
எழுத்தறிவு கொண்டவரின்
எண்ணிக்கை உயர்வினாலும்
திறைகடல் தாண்டிய
திறன்மிகு இளையவர்களினாலும்
புதியதொரு விடியலும் கண்டது!
பல்லாண்டுகளாய் தொடரும்
'வளர்கின்ற' நாடெனும் பட்டம்
நூற்றாண்டிற்குள்ளாவது
மாறிட மெய்படுமோ!

முடிவுகள்

இதுவரை
முக்கியமான முடிவுகள்
இதுவா அதுவாவென
இரு தண்டவாளங்களின் மேலெ
தடுமாறி பயணிக்கின்றன
தூரத்தே இரு மனநிலைகளும்
இணைவதுவாய் தோற்றம்
கடந்து சென்றபோதும்
முற்று பெறாத முடிவுகள்!

Sunday, August 08, 2010

அருகாமை

இசைதட்டு மாற்று,
சன்னலை இறக்கு,
குளிர்பதனியை சரிசெய்,
ஏனைய அதட்டல்கள் கேளாமல்
அமைதியுடன் பயணிக்கின்றது
எனது வாகனம்.
குட்டி தேவதையின்
அருகாமை மதிப்பு
ஒளியில்லாத இருளுக்கு,
வெப்பமில்லாத தட்பத்திற்கு
புரிவது போன்றது.

தீவு

வானூர்தியின் வரைபடத்தில்
உன் வசிப்பிடம்
விலகி விலகி விரைகையில்
துவங்கியது
காற்றிலாத அறையில்
மூச்சடைக்கும் உணர்வு!
மனிதர்களின் மத்தியிலும்
நீயிலாத தனிமை தருணம்
நாற்புறமும் நீர் சூழ்ந்த
தீவாய்தான் தோன்றியது!
விலைவாசியின் ஏறுமுகமாய்
இந்த இடைவெளி
காதலை பெருக்கினாலும்
இனிமேலும் வேண்டாமென
வேண்டுவது இயற்கை!