Tuesday, February 19, 2019

சிறுத்தைகளின் சரித்திரம்

 காதலர் தினமன்று கருப்புதினமாக்கிய கோழை வதம். Feb 14, 2019 அன்று நடந்த வன்முறை தாக்குதலில் இன்னுயிர் நீத்த 44 இந்திய வீரர்களுக்கு வீர வணக்கமும் அஞ்சலியும் இந்தக்  கவிதை - கி.வினோத்
#புல்வாமா #pulwama 

படையலுக்கு நேர்ந்துவிடும் பலியாடுகள் இல்லை நீவிர் 
படைகளுக்கு வலு சேர்க்கும் சிறுத்தைகள் அல்லவா நீவிர்!

வீரமுடன் எல்லை காப்பதும் போர்புரிவதும்  தினசரி அலுவல்
விவேகமுடன் கலகம் உட்பூசல் கையாள்வது பகுதி நேரம்
வேட்கையுடன் தீவிரவாதம் தகர்ப்பது  பட்டியலிட்ட பணி 
பாசமுடன் பேரிடர் வதைக்கும் மக்கள் மீட்பது உமது மாண்பு
நேசமுடன் மனை மக்கள்விட்டு தனித்து வாடுவதும் பண்பு
பெருமையுடன் பணியிலும் பனியிலும் உயிர் தியாகம் சிறப்பு


வரம்புகள் பிரித்து விதிமுறையுடன் தாக்குபவன் தேவலை
நரம்புகளின்றி கொடும்நியதி வகுக்கும் கோழைகளின் வேலை
பயமேதுமின்றி பகட்டாய் ஆளும் அரசோ அதன் எந்திரமோ
பாதுகாப்பு குறைவை வெட்கமின்றி கடமையாக்கும் காவலோ
பச்சை துரோகமென உணர்ந்திடாத ஆயுத ஊழல் பேரங்களோ
பக்கத்துணையென நடித்து முதுகினில் குத்தும் பலரை தாங்குவீர்

தம் மண்ணின் மைந்தரை கண்மணிகளாய் காத்திடும்
தங்களுக்கு எம் தந்தையரென பாசம்பாராட்டுவதன்றி என் செய்வது!


Sunday, December 09, 2018

குடைச்சல்

எனது மேல் மாடியில்
எலியொன்றின் இடைவிடாத
அலைச்சல்
எனது காதுக்குள் புகுந்து
மண்டை முழுவதும் பரவி
மறு காதுவழி வெளியேறுவதாய்
குடைச்சல்
திமிறும் எலியினை சிறையெடுத்து
தூக்கி வீசி
அமைதி வாழ்வு வாழ ஆசைதான்
அன்றி
அதன் இருக்கை மறந்து
இயல்பாய் நடித்து
சிந்தை செலுத்துகின்றேன்
எங்கோவொரு மூலையில்
எலி வசித்துக் கொண்டுதானிருக்கின்றது

--கி.வினோத்

கலியுக பிரம்மாவே!


நான் நாயெனவும்
தெருதான் எனக்கான வாழ்வியல்
எனவும்
தீர்மானிக்கும் நீ
மனிதனாய் பிறவி எடுத்தும்
மிருக மனதுடனே அலைகின்றாய்

மற்றவனை கீழ்தரமாய் சிருஷ்டிக்கும்
கலியக பிரம்மாவே
உன்னுடனே போகட்டும்!
உன் உதிரத்தில் உதிர்ந்த
இளைய தலைமுறை
சமவெளியில் பயணிக்க
எம்முடன் கைகள் கோர்க்கட்டும்!

--கி.வினோத்

விரைவு ஊர்தி

நூறாயிரம் முறையேனும் நினைத்திருப்பேன்
இது நாள் வரையிலான பயணம்
விரைவு ஊர்தியாய் பறந்தது போலிருக்கும்

எந்தையர் தலைமுறையின் பயணம்
படிப்படியாய் மேலேறிய அனுபவம்
வழி நெடுகிலும் இளைப்பாற நேரமுடன்
உச்சி சேருகையில் ஆத்மார்தமான திருப்தி

எந்தன் தலைமுறையின் பயணமோ
மின் தூக்கியில் மேலேறும் அனுபவம்
வழி தோறும் இரசிக்க நேரமில்லை
உச்சி சேருகையில் ஆயாசமான அயற்ச்சி

மேலிறிருந்து கீழ் நோக்கு கையில்
இலக்கு அல்ல அதை அடைய
பயணிக்கும் பாதைதான் பாடமென புரிகின்றது!


--கி.வினோத்