Monday, December 24, 2012

புதிய புரட்சி


புதிய புரட்சி

பாரதியும் பகத் சிங்கும்
பிறப்பெடுத்தாலும்
புதியதொரு புரட்சிக்கு
புறப்படுவார்கள்
பெண் விடுதலை தேடி!

தலைப்பு தீ

தலைப்பு செய்திகளில் தகிக்கும்
கற்பழிப்பு பற்றிய தீ
தணிந்து மறந்துவிடும்
அடுத்த முறை
தலைப்பில் வரும் வரையோ
அடுத்தது உன் வீட்டின்
கதவு தட்டும் வரையோ!

விலங்கினம்


தெரு நாய்களுக்கு நிகராய்
தென்படும் இடமெல்லாம்
வன்புணர்ச்சி கொள்ளும்
மிருக இயல்பு ஏன்?

நவீனம் நோக்கி
நூற்றாண்டுகள் நகர்ந்தும்
போகத்தின் வடிகாலாய்
பெண்மையை ஸ்தாபிக்கும்
ஆணாதிக்க சமுதாயமா?

காலம் கடந்த நீதியும்
கடுமையான தீர்ப்பு பெறாத
விலங்கினத்தின் விடுதலை வாழ்வும்
நடைமுறை நகங்கள் நசுக்கி
நெடுந்துயரில் தள்ளப்படும்
கற்பிழந்தவரின் வடுக்களுமா?

காக்கும் கடமையை
கழுவிலேற்றி பின் கைகட்டி
பார்க்கும் நிலைமை
தரும் அசட்டுத்தனம்
துளிர்விடும் துணிச்சலா?

நாடாள்வது பெண்ணாயினும்
விபத்தில் வீழ்ந்தவளின்
துயர் துடைக்கவோ அன்றி
துணை நின்றிடும் மக்களை
தணிக்க திராணியற்ற
அரசக் கோமாளிகளோ?

எதுவாயினும் எங்கள்
உயிர் பூக்களின் இதழ்கள்
முற்றிலும் உதிர்வதற்குள்
வினை செய்த விலங்கினத்தை
வேட்டையாட வகை செய்குவோம்!